கோவில் இடிப்புகள்- வரலாற்றுப் பின்னணி என்ன?
அ.அன்வர் உசேன்
பாபர் மசூதி இடிக்கப்பட்டு 22 ஆண்டுகள் கடந்துவிட்டன. பாபர் மசூதி இடிப்பு இந்திய மதச்சார்பின்மை மீது தொடுக்கப்பட்ட மிகப்பெரிய திட்டமிட்ட தாக்குதல் ஆகும். மோடி ஆட்சி அமைந்துள்ள இத்தருணத்தில் வகுப்பு வாத சக்திகள் தம் நடவடிக்கைகளை தீவிரமாக்கியுள்ளன. “நமது நீண்ட கால கனவை நனவாக்கிட இது பொன்னான வாய்ப்பு” என சங்பரிவார இந்துவகுப்புவாதிகள் பகிரங்கமாக கூறி வருகின்றனர். சங் பரிவாரத்தின் கனவு “இந்து ராஷ்ட்ரம்” என்பதாகும்.சங்பரிவாரத்தின் நச்சுப் பிரச்சாரத்தில் இடிப்புகள் என்பது ஒரு முக்கிய இடம்பிடித்துள்ளது. இசுலாமிய மன்னர் களால் 60,000 கோவில்கள் இடிக்கப் பட்டதாகவும் அதனால் இந்து மதம் அவமானப்பட்டது எனவும் அதற்கு பழி தீர்க்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் பல்லாண்டுகளாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். பாபர் மசூதி இடிப்பு என்பது பழிதீர்க்கும் படலத்தின் முதல் படி! இசுலாமியர்களுக்கு எதிராக கருத்து இல்லாத சாதாரண மக்கள் கூட கோவில் இடிப்புகள் குறித்த பிரச்சாரம் உண்மை என்றே நம்புகின்றனர்.இந்திய வரலாற்றில் இசுலாமிய மன்னர்களால் கோவில்கள் இடிக்கப் பட்டனவா? ஆம்! இடிக்கப்பட்டன. அதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் கோவில் இடிப்புகளை ஆய்வு செய்யும் வரலாற்று ஆய்வாளர்கள் இதுதொடர்பான வேறு சில கேள்விகளையும் முன் வைக்கின்றனர்.இசுலாமிய மன்னர்கள் மட்டும்தான் கோவில்களை இடித்தனர் அல்லது கொள்ளை அடித்தனரா? இந்து மன்னர் கள் செய்யவில்லையா?கோவில் இடிப்புகள் என்பது மத அடிப்படையில் நடந்த நிகழ்வா அல்லது அதற்கு வேறு காரணம் உண்டா?
இந்தியாவில் மட்டுமே இது நடந்ததா?
இசுலாமிய மன்னர்கள் கோவில்களை உருவாக்கியது உண்டா? அதே போலஇந்து மன்னர்கள் மசூதிகளை கட்டினரா?இக்கேள்விகளுக்கு கிடைக்கும் பதில் சங்பரிவாரத்தின் பல பொய்களை அம்பலமாக்கிவிடும்.
கோவில் கொள்ளையும்இந்து மன்னர்களும்
கி.பி.642ல் பல்லவ மன்னன் முத லாவது நரசிம்மவர்மன் சாளுக்கியர்களை தோற்கடித்து தலைநகரான வாதாபியில் இருந்த கோவிலில் விநாயகர் சிலையைகொள்ளை அடித்தான். கி.பி. 692ல் வட இந்திய மன்னர்களை தோற்கடித்த சாளுக் கியர்கள் அங்குள்ள கோவில்களிருந்து கங்கை மற்றும் யமுனை விக்கிரகங்களை களவாடி தமது ஆட்சி பகுதிக்கு கொண்டு வந்தனர். வங்காளத்தை ஆண்ட இந்து மன்னனின் படைகள் காஷ்மீர் அரசன் லலிதாத்தியவை தோற்கடித்த பொழுது அந்த அரசனின் குலதெய்வமான விஷ்ணு வைகுந்தாவின் சிலையை அழித்தனர். 9ம் நூற்றாண்டில் சிங்களத் தீவின் மீது படை எடுத்த பாண்டிய மன்னன் சிறீமாற சிறீவல்லபா அனுராதா புரத்தை சூறையாடியது மட்டுமல்ல; சிங் களவர்களின் கடவுளான தங்கத்தாலான புத்தரின் சிலையை கைப்பற்றி தனதுநாட்டிற்கு கொண்டுவந்தான். 50 ஆண்டுகள் கழித்து வேறொரு சிங்கள மன்னவன் பாண்டிய நாட்டின் மீது படை எடுத்து பல நகரங்களை சூறையாடி புத்தர் சிலையை மீட்டு சென்றான். பத்தாவது நூற்றாண்டில் கங்கரா அரசன் சாஹியை பிரதிஹாரா அரசன் ஹெராம்பாபல்லா தோற்கடித்த பொழுது தங்கத்தாலான விஷ்ணு வைகுந்த சிலையை கைப்பற்றிச் சென்றான். சில ஆண்டுகளுக்கு பிறகு கெண்டல்லா அரசன் யெசோவர்மன் பிரதிஹாரா அரசனை தோற்கடித்து அதே விஷ்ணு வைகுந்த சிலையை கைப்பற்றி தன் தேசத் திற்கு கொண்டு சென்று கஜூராஹோவில் இருந்த இலட்சுமணன் கோவிலில் நிறுவினான். கி.பி.11ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சோழ அரசன் முதலாவது இராசேந்திரன் சாளுக்கியர்களை தோற்கடித்து துர்கா, விநாயகர், நந்தி ஆகிய விக்கிரகங்களயும்; கலிங்க மன்னர்களை தோற்கடித்து பைரவன், பைரவி, காளி ஆகிய சிலைகளையும் வங்கத்து அரசனை தோற்கடித்து சிவன் சிலையை யும் கைப்பற்றி தன் தேசத்திற்கு கொண்டு வந்து போரில் வென்றதற்கான பரிசுகளாக மக்களின் பார்வைக்கு வைத்தான். இப்படி இந்து மன்னர்கள் இந்துக் கோவில்களை கொள்ளை அடித்த பட்டியல் நீளமானது.
கோவில் அழிப்பும்இந்து மன்னர்களும்
பத்தாவது நூற்றாண்டில் இராஷ்ட்ர கூட அரசனான மூன்றாவது இந்திரன் தனது பரம எதிரியான பிரதியாரா அரசனை தோற்கடித்த பொழுது களப்பிரியா விலிருந்த அவனது கோவிலை அழித்தான்; அதனை பெருமையாக பதிவும்செய்தான். 11ம் நூற்றாண்டில் காஷ் மீரை ஆண்ட ஹர்ஷா எனும் மன்னன் கோவில்கள் கொள்ளை அடிக்கவும் அழிக்கவும் தனியாக ஒரு அமைச்சரையே நியமித்தான். அவன் காலத்தில் குஜ ராத்தில் இருந்த நூற்றுக்கணக்கான ஜைனக்கோவில்கள் கொள்ளை அடிக்கப்பட்டது மட்டுமல்ல; அவை அழிக்கவும்பட்டன.இவையெல்லாம் இசுலாமியர்கள் எனப்படும் துருக்கியர்கள் இந்தியாவிற்கு வரும் முன்பே இந்து மன்னர்களால் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட நிகழ்வுகள் ஆகும். இதனை அப்படியே இசுலாமிய மன்னர்கள் தொடர்ந்தனர். துருக்கியர்கள் வருகைக்குப் பின்னரும் கூட இந்துமன்னர்கள் தாம் தோற்கடித்த மன்னர் களின் கோவில்களை கொள்ளை அடிப் பதையும் அவற்றை அழிப்பதையும் தொடர்ந்தனர்.கி.பி.1460ல் ஒடிசா அரசன் கபி லேந்திரா தமிழகத்தின் மீது படையெடுத்த பொழுது காவிரி டெல்டா பகுதியில் இருந்தபல சைவ மற்றும் வைணவக் கோவில் களை முற்றிலுமாக அழித்தான். கி.பி. 1579ம் ஆண்டு முரஹரிராவ் எனும் ஒரு இசுலாமிய சுல்தானின் தளபதி கிருஷ்ணா ஆற்றின் தெற்கே போரின் பொழுது அஹோபிலம் கோவிலை அழித்தது மட்டுமல்ல, அதன் வைடூரியத்தாலான விக்கிர கத்தை கைப்பற்றி தனது சுல்தானுக்கு சமர்ப்பித்தான்.இப்படி இசுலாமிய மன்னர்கள் மட்டுமல்ல; இந்து மன்னர்களும் கூட கோவில்களை கொள்ளை அடித்தனர். அழிக்கவும் செய்தனர். ஏன் அவ்வாறு செய்தனர்?
கோவில் ஒரு அரசியல்அதிகாரச் சின்னம்
மன்னர்கள் ஆண்ட ஒவ்வொரு தேசத்திலும் ஏதாவது ஒரு கோவில் அந்த மன்னனுக்கு சொந்தமாகவோ அல்லது அவன் வழிபடும் கோவிலாகவோ அல்லது அவனது குலதெய்வம் குடி கொண்டுள்ள கோவிலாகவோ இருந்தது. இந்த கோவில் ஒரு அரசியல் அதிகாரச் சின்னமாக திகழ்ந்தது. தோற்ற மன்னனின் அனைத்து அடையாளங்களையும் அழிப்பது என்பது அந்தக்கால போரின் பிரிக்க முடியாத நியதி!. எனவே அரசியல் அதிகாரச் சின்னமாக விளங்கிய கோவில் ஆபத்திற்கு உள்ளாவது தவிர்க்க இயலாத ஒன்றாக ஆனது. எனினும் போரில் வெற்றி கண்ட மன்னன் தோற்ற மன்னனின் கோவிலை மட்டுமே அழித்தான். வேறுஎந்த கோவிலையும் அவன் தொடுவது கூட இல்லை. இது இந்து மன்னர்களுக்கு எவ்வளவு பொருந்துமோ அவ்வளவு . இசு லாமிய மன்னர்களுக்கும் பொருந்தும்.தமிழகத்தில் சைவ மதமும் வைணவ மதமும் புத்துயிர் பெற்ற பொழுது ஏராள மான சமணக் கோவில்களும் புத்தக் கோவில்களும் அழிக்கப்பட்டன அல்லது சைவ மற்றும் வைணவ கோவில்களாக மாற்றப்பட்டன. ஆயிரக்கணக்கான சமணர்கள் கழுவிலேற்றி கொல்லப்பட் டனர். சங் பரிவாரங்கள் இந்த உண்மை களை மூடி மறைத்திட முயல்கின்றன. வழிபாட்டுத்தலங்கள் அழிக்கப்படு வது இந்தியாவில் மட்டுமல்ல; உல கின் பல பகுதிகளில் நடந்துள்ளது. இசுலாமியர்களை போரில் வென்றபொழு தெல்லாம் மங்கோலியர்கள் ஆயிரக் கணக்கான மசூதிகளை அழித்தனர். லத்தீன் அமெரிக்க நாடுகள் மீது ஸ்பெயின் படையெடுத்து வென்ற பொழுது அவர்கள் செய்த முதல் காரியம் மயன் மற்றும் அல்ஸ்டெக் பிரமிடுகளின் மீது இருந்த உள்ளூர் கோவில்களை அழித்துவிட்டு மாதா கோவில்களை கட்டியது ஆகும்.
கோவில்களுக்கு உதவிய இசுலாமிய மன்னர்கள்
கி.பி. 1326ல் முகம்மது பின் துக்ளக் பிதார் மாவட்டத்தில் சிவன் கோவிலை சீர்படுத்திட இசுலாமிய அதிகாரிகளை நியமித்தான். வெகுவிரைவில் கோவிலை சீர்படுத்தி வழிபாட்டை தொடங்கிட உத்தரவாதம் செய்ய வேண்டும் என்பது சுல்தான் இட்ட கட்டளை! ஜிஸ்யா எனும் வரி செலுத்துவோர் எவராக இருப்பினும் அவர்கள் கோவில்களை கட்டிக்கொள்ளலாம் எனவும் சுல்தான் ஆணை பிறப்பித்தான். இதே போல விஜயநகர மன்னன் இசுலாமியர்கள் அதிகமாக வாழ்ந்த இடங்களில் மசூதிகளை கட்ட உதவினான். இது போல கோவில்களுக்கு இசுலாமிய மன்னர்கள் உதவியதும் மசூதிகளுக்கு இந்து மன்னர்கள் உதவியதுமான பல நிகழ்வுகள் வரலாற்றில் பொதிந்துள்ளன. இந்து வகுப்புவாதிகள் மட்டுமல்லாது இசுலாமிய வகுப்புவாதிகளும் கூட இத்தகைய வரலாற்று உண்மைகளை மறைப்பதில் கவனமாக உள்ளனர். சாதாரண மக்களின் பொதுப்புத்தியில் சங் பரிவாரம் திணித்துள்ள வரலாற்றுப் பொய்களை அகற்றுவது மதச்சார்பற்ற சக்திகளின் முக்கியப் பணிகளில் ஒன்றாகும். மதச்சார்பின்மையை காக்கும் பணியை உழைக்கும் மக்களின் இயக்கங்கள் மீது வரலாறு சுமத்தியுள்ளது. உழைக்கும் மக்கள் அதனை செய்து முடிப்பர் என்பதில் அய்யமில்லை!
வரலாற்று விவரங்களின் மூலம் - ரிச்சர்ட் பேட்டனின் ஆய்வுக்கட்டுரை.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுதி
சென்னை, டிச.2-
உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தையொட்டிமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியின்மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் விடுத்துள்ளசெய்தி வருமாறு:
உலகெங்கிலும் கண்ணியமும், சமத்துவமும் மிக்கவாழ்க்கைக்கான தேடலுடன் இருக்கும் எண்ணற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி உலகதின வாழ்த்துக்களைஉரித்தாக்கிக்கொள்கிறது. தொழில்நுட்ப உத்தரவாதத்துடன் மாற்றுத் திறனாளிகளின்நிலையான முன்னேற்றம் என்ற முழக்கத்தை 2014ம் ஆண்டின் கருப்பொருளாகக் கடைப்பிடிக்குமாறு உலகநாடுகளை ஐ.நா.சபை கேட்டுக்கொண்டுள்ளது.
இது வரவேற்புக்குரியது.இந்தப் பின்னணியில் இந்தியாவிலும், தமிழகத்திலும் முன்னெடுக்க வேண்டிய சில முக்கிய பிரச்சனைகள் உள்ளன. முதலில், மாற்றுத்திறனாளிகளின் எண்ணிக்கை குறித்து ஒரு முறையான கணக்கெடுப்பு தேவைப்படுகிறது. 2011ல் 22லட்சம் மாற்றுத்திறனாளிகள் இருப்பதாகக் கூறிய தமிழக அரசு, தற்போது அந்தஎண்ணிக்கையை 16 லட்சம் என்று குறைத்திருக்கிறது. இதற்கு என்ன அடிப்படை இருக்க முடியும்? எண்ணிக்கைக்கு ஏற்ப நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்னும் போது, அறிவியல்பூர்வ கணக்கெடுப்பு அவசியமாகிறது.
இரண்டாவதாக நாடு முழுதும் அனைத்து இடங்களிலும், அனைத்துத் துறைகளிலும் ஏற்கப் படக்கூடிய அடையாளச் சான்று வழங்கப் பட வேண்டும். தற்போது வித விதமான அடையாளச் சான்று வெவ்வேறு துறைகளில் கோரப்படுவது மிகுந்த சிக்கலை மாற்றுத் திறனாளிகளுக்கு ஏற்படுத்துகிறது. சான்று கிடைப்பதில் சிரமம், அதைப் பெறுவதற்கான அலைச்சல், சான்று இல்லாததால் தகுதி இருந்தும் பயன் பெற முடியாமை என்று சங்கிலித் தொடராய் பிரச்சனைகள் நீள்கின்றன. இவற்றை, ஒரே சான்று அளிப்பதன் மூலம் தவிர்க்க முடியும்.கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் 3 சதவிகித ஒதுக்கீடு என்பது சட்ட ரீதியான உரிமை. 3 மாதங்களுக்குள் பின்னடைவு காலிப் பணியிடங்களைக் கண்டறிந்துநிரப்ப வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் மத்திய, மாநில அரசுகள்நிறைவேற்றாதஅவலம்தொடர்கிறது. இதற்குநடுவே தமிழகத்தில் ஏற்கனவே அளிக்கப்பட்டு வந்தமாதாந்திர உதவித்தொகையும், ஆயிரக்கணக்கான மாற்றுத்திறனாளி பயனாளிகளிடமிருந்து பறிக்கப்பட்டிருக்கிறது.
இதை எதிர்த்துவலுவான போராட்டங்கள்நடந்துகொண்டிருக்கின்றன.மேலும், பெண் மாற்றுத்திறனாளிகள் குறிப்பாக மனவளர்ச்சி குன்றிய மற்றும் காது கேளாத இளம் பெண்கள் மீதான பாலியல் வன்முறை அதிகரித்து வருகிறது. இதைத் தடுத்து நிறுத்த தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.அரசு இயக்கும் மாற்றுத் திறனாளிபள்ளிகளில் போதிய பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், பணியாளர்கள், கட்டமைப்பு வசதிகளை உறுதிப்படுத்த வேண்டும்.
தகுந்த ஏற்பாடுகள் இல்லாத இடங்களில் மாற்றுத்திறனாளிகள், தேர்வுகளில் தோல்வி அடையும் சூழல் நேரிடுகிறது என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்ட விரும்புகிறது.மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் எல்லா அரசு கட்டடங்களும், வாகன நிறுத்தம் உட்பட மாற்றி அமைக்கப்படும் என்று தமிழக அரசு ஆணை வெளியிட்ட பின்னும், தலைமைச் செயலகத்தில் கூட மாற்றம் வரவில்லை.இவற்றை எல்லாம் உறுதிப்படுத்தும் விதத்தில் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளை மேம்படுத்தக் கூடிய சட்டத்தை மத்திய அரசு விரைவில் கொண்டு வரவேண்டும். அவர்களுக்கு, சட்டக் கூலியைஉறுதி செய்யக் கூடிய ஊரக வேலை உறுதி சட்டத்தைத் தளர்த்தும் முயற்சியையும் கை விட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.
தமிழகத்தில், சிரமமான நிலைமைகளுக்கிடையில் போராட்டங்களின் மூலம் சில உரிமைகளை மாற்றுத்திறனாளிகள் பாதுகாத்து வருகின்றனர் என்பதுபாராட்டுக்குரியது. தொழில் நுட்ப உத்தரவாதத்துடன் நிலையான முன்னேற்றத்தை அடைய மாற்றுத்திறனாளிகள் மேலும் நீண்ட நெடிய போராட்டப்பாதையில் செல்ல வேண்டிய அவசியம் இருக்கிறது. இந்தப் பாதையில், மாற்றுத்திறனாளிகளுடன் உடன் இருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாற்றும் என இந்நாளில் உறுதி கூறுகிறோம்.
நன்றி
தீக்கதிர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக